Thursday, January 8, 2009

உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடலாமா "சங்கதி"(www.sankathi.com)?

நண்பர்களே

இத்தலைப்பினை கண்டதும் அதிர்ச்சி அடைவீர்கள். உலகம் முழுவதும் தமிழர்களால் அதிக அளவு பார்க்கப்படும் செய்தி தளம் சங்கதி பதிவு போன்ற தளங்கள்.

ஆனால் இப்பொழுது அத்தளங்களின் செய்திகள் நம்பத்தகாத வகையில் உள்ளது.

சிறையில் இருக்கும் பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோர் இணைந்து 01.12.2008 அன்று கோவையிலுள்ள பெரியார் படிப்பகத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பில் தமிழகம் வருகை தரும் காங். மத்திய மந்திரிகளுக்கு பெரியார் திராவிடர்கழகத்தினரால் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அறிக்கை வெளியிட்டனர்.

அவர்கள் விடுத்த அறிக்கை :

PathivuToolbar ©2009thamizmanam.com

தமிழகம் வருகை தரும் காங். மத்திய மந்திரிகளுக்கு கறுப்பு கொடி காட்டப்படும் - பெரியார் தி.க.

பெரியார் திராவிடர் கழகம்

01.12.2008 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கோவை, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்

செய்திக் குறிப்பு :.

சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராகவும், தமிழக மீனவர்களைக் கண்மூடித்தனமாக சுட்டுக்கொள்வதைக் கண்டித்தும் தமிழகம் கட்சிகளைக் கடந்து ஒருமித்தக் கண்டனக் குரலைத் தெரிவித்து வருகிறது.

தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த

இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொட்டும் மழையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மனித சங்கிலியாக அணிவகுத்து சிங்கள இராணுவத்தின் இனப்படுகொலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வலிமையாக வெளிப்படுத்தினர்.

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி வருகிறது.

சிங்கள இராணுவத்தின் தமிழினப்படுகொலையோ தொடர்ந்து நீடிக்கிறது.

மத்திய ஆட்சித் தலைமை பொறுப்பில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு குறிப்பாக தமிழக காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தும் கூட தமிழ்நாட்டு மக்களின்

உணர்வுகளை சற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள்.

தமிழக மீனவர் படுகொலையை, ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையைத் தடுக்கவோ கூட

முன்வராததோடு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் தமிழக மீனவர்கள் எல்லை

தாண்டி போகிறார்கள் என்றும், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவதே கூட சட்ட விரோதம் என்றும்,

பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும் ஆளாளுக்கு

அறிக்கைகளை அளித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி சர்வதேச பிரச்சினைகளில் மாநில அரசுகளோ, கட்சிகளோ தலையிட உரிமையில்லை என்று பேட்டி அளிக்கிறார். சிங்கள இராணுவத்துக்கான பயிற்சி

தொடரும் என்கிறார்கள் . ஏன் ? இராணுவ உதவிகளும் கூட தொடர்ந்து அளிக்கப்படும் என்கிறார்கள்.

அதோடு ஈழச்சிக்களைக் காரணம் காட்டி 1990 ல் தி.மு.க. அரசைக் கலைக்க பின்புலமாக இருந்தவரும், தொடர்ந்து ஈழப்பிரச்சினையில் தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருபவரும், மும்பை தாக்குதலின் வழியாக தனது தகுதியின்மையைக்மெய் காட்டியும் உள்ள எம். கே. நாராயணனை பாதுகாப்பு ஆலோசகராக பிடிவாதமாக தொடர்ந்து வைத்துக்கொண்டும் உள்ளனர்.

மத்தியில் ஆட்சி செய்வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றாலும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களே போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சித் தலைமை தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக்குழு பிரதமரை நேரில் சந்தித்து பேசும் 04.12.2008க்குப் பின் மூன்று நாட்களுக்குள் இணக்கமான முடிவேதும் தெளிவாக அறிவிக்கப்படாவிடில் 08 /12/08 மேல் தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு அவர்களின் தமிழன விரோத போக்கை அம்பலப்படுத்தவும் அவர்கள் மீது தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வை வெளிப்படுத்தவும் அவர்கள் அரசு சார்ந்த, சாராத எந்நிகழ்ச்சிக்கு வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவதென பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது.

காங்கிரசின் இந்த துரோகத்தை எதிர்க்கும் தமிழின உணர்வாளர்கள் இந்தக் கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வருமாறு பெரியார் திராவிடர் கழகம் தோழமையுடன் வேண்டிக்கொள்கிறது.

இவண்

பெரியார் திராவிடர்கழகம்

நன்றி : பெரியார் பாசறை

இவ்வறிக்கை வெளியிட்டபின்னர் 19.12.2008 அன்று பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி தமிழக காவல்துறையினரால் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரசு கட்சியின் மன்மோகன்சிங் சென்னை வரும் தகவல் கிடைத்த பின்னர் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பெரியார் திக துணைத்தலைவர் தோழர் ஆனூர் செகதீசன் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் ஆகியோருடனும் ஆலோசித்துவிட்டு 29.12.2008 அன்று மன்மோகன்சிங் தமிழக வருகையைக்கண்டித்து 08.01.2009 அன்று சென்னையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்.

அறிக்கை:





நன்றி : பெரியார் பாசறை


கிழமை இதழ் பெரியார் முழக்க செய்தி :
ஜன.8 இல் பிரதமருக்கு கருப்புக்கொடி!
பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு
ஜன. 8 ஆம் தேதி சென்னை வரும் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டுவது என பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கோவையில் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் ஒருமித்த கண்டனக் குரலை எழுப்பி வருகிறது. தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
இவ்வளவுக்கும் பிறகு சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தமிழர்கள் அணிவகுத்து சிங்கள ராணு வத்தின் இனப்படுகொலைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை உண்மையாக வெளிப் படுத்தினர். பிறகு தமிழக நாடாளுமன்ற குழு - பிரதமரை சந்தித்து வற்புறுத்தியது.
இறுதியாக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமரை சந்தித்து வலியுறுத்திய பிறகும் இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதையும் தடுக்கவில்லை.
ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, பிரதமர் எந்த இணக்கமான முடிவும் எடுக்காமல், தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பிரதமர் தமிழகம் வருவது - தமிழக மக்களைஅவமதிக்கும் செயலே ஆகும்.
எனவே 8.1.2009 அன்று சென்னை வரும் பிரதமருக்கு, தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திட, கருப்புக்கொடி காட்டு வது என பெரியார் திராவிடர் கழகம் முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நன்றி : பெரியார் முழக்கம் 01.01.2009


குறுகிய காலப்பகுதியில் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் ,விடுதலை க.இராசேந்திரன் அவர்களும் பெரியார் திகவின் சென்னை மாவட்டத்தலைவர் தோழர் அன்பு தனசேகரன் அவர்களும் நேரடியாக தமிழ்நாடு முழுக்க உள்ள பெரியார் திராவிடர் கழக தோழர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு வந்து ஒன்று சேர்வதற்கான ஏற்பாட்டினை துரிதமாக செய்தனர்.
இதில் சென்னை தோழர் தபசி குமரன் முழுநேரம் உழைத்து ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபட்டார்.

இவர்களின் உழைப்பால் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் திராவிடர் கழக தோழர்கள் பேருந்து சீருந்து பிடித்தும் தொடர்வண்டியிலும் 08.01.2009 அன்று சென்னை வந்து சேர்ந்திருந்தனர். சென்னை தோழர்களின் ஒருங்கிணைப்பில் தோழர்கள் அனைவரும் சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவில் காலை 8 மணியளவில் குவிந்தனர்.

இதற்கு முன்னதாக ஒரு சில நாட்களுக்கு முன்பு திராவிடம் என்பதையே தீண்டத்தகாத சொல்லத்தகாத வார்த்தையாக கூறிவரும் ஒருவர் 07.01.2009 அன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வதாக செய்தி வெளியிட்டுவிட்டு 08.01.2009 அன்று சென்னை மறைமலையடிகள் பாலம் சென்று அங்கு யாரும் இல்லாததால் கடைசி நேரத்தில் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் திரளாக சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் செய்வதைக்கேள்விப்பட்டுவிட்டு அவசர அவசரமாக பெரியார் திராவிடர் கழத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் புகுந்துகொண்டார்.

திருப்பூரில் 2007 இல் அனைத்து அமைப்புகளும் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் திராவிடத்தையும் பெரியார் திக பொதுச்செயலாளார் கோவை.கு.இராமகிருட்டிணன் மற்றும் ஆதிதமிழர் பேரவை பொதுச்செயலாளர் தோழர் நீலவேந்தன் அவர்களையும் இழிவுபடுத்திய அந்த நபர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று கூட்டத்தில் புகுந்து ஆர்ப்பாட்டத்தின் முன்வரிசையில் நடுவில் போய் நின்றது கண்ட தோழர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பெரியார் திக தோழர்கள் நாகரீகம் கருதி அந்நபருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தாங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்ததன் நோக்கத்தில் கவன செலுத்தினர். அந்நபருடன் 20 க்கு குறைவாகவே அவரது ஆதரவாளர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அந்நபர் தான் நிற்பதை மட்டும் நிழற்படம் எடுத்து முன்கூட்டியே அவர் எழுதிவைத்துக்கொண்ட 2000 பேர் கலந்துகொண்டனர் என்ற ஒரு பொய் செய்தியை செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு முழுக்க முழுக்க வேலை செய்து ஏற்பாடு செய்த பெரியார் திகவின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் பெயர் கூட இல்லாமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டு செய்தியினை அந்நபர் முன்கூட்டியே செய்தியாளர்களிடம் அளித்துள்ளார்.

இவ்வாறு தவறான செய்தி வெளியானதை கேள்விப்பட்ட தோழர் வே.மதிமாறன் தான் எடுத்த நிழற்படங்களையும் உண்மையான செய்திசுருக்கத்தினையும் தனது வலைப்பூவில் வெளியிட்டு உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அவ்வார்ப்பாட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட பெரியார் திகவினரும் மற்ற அமைப்பின் தலைவர்கள் மட்டும் கலந்துகொண்டனர். மொத்தத்தில் 800 வரை தோழர்கள் வரை கலந்துகொண்டனர்.

இவற்றை எதையும் ஆய்வு செய்யாமல் உலகமக்களால் அதிக அளவு பார்க்கப்படும் சங்கதி , பதிவு மற்றும் சில தளங்கள் ஆய்வு செய்யாமல் செய்தியினை வெளியிட்டதால் தோழர்கள் அனைவரும் அத்தளங்களின் செய்திகளின் மேல் அதிருப்தியில் உள்ளனர்.

சனவரி 2 அன்று அந்நபர் வெளியிட்ட அறிக்கை

Friday, January 2, 2009

தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.

பழ. நெடுமாறன்


எமக்கு இத்தகவல்களை வழங்கி உதவிய தளங்கள்:

1 ) தோழர் வே.மதிமாறன் அவர்களின் வலைப்பூ : http://mathimaran.wordpress.com/2009/01/08/article154/

2) பெரியார்பாசறை

3) பெரியார் முழக்கம் 01.01.2009

4) தென்செய்தி வலைப்பூ



தகவல்களை வழங்கிய நண்பர்களுக்கும் வலைப்பூக்களும் நன்றி

மேலும் இதைப்பற்றிய தகவல்கள் இருந்தால் எமக்கு அனுப்பி வைக்கவும்.

தோழமையுடன்


ஆழிக்கரையான்