Monday, August 4, 2008

பிரடெரிக் எங்கெல்சு இறப்பு- ஆகத்து 05 1895




உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை நாய் பிழைப்பு என்று அவரே குறிப்பிடும் வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்புக்கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் கெகலின் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார்.




மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து செர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் செர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.




தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தி அவர் வளர்வதற்காக தன்னையே கரைத்துகொண்டவர்தான் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.




எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவ ஞானி; எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகக் கட்டுப்பாடான ஒழுங்கு நிறைந்தவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.


1 comment:

ஆழிக்கரைமுத்து said...

மேலும் காண ... http://en.wikipedia.org/wiki/Friedrich_Engels