கருப்புச்சட்டை :1
"ராஜீவ் கொலை" என்ற ஒரு சம்பவத்தை, வஞ்சமாகவே மனதில் நிறுத்தி, புலிகளை ஒடுக்குதல் என்றப் பெயரில் ராஜபக் சே நடத்தும் தமிழினப் படுகொலைக்கு சோனியாவின் வழிக்காட்டுதலில் நடைபெறும் மன்மோகன் அரசு அனைத்து வழிகளிலும் ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவுகிறது.
இந்தியத்துணைக்கண்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியே, ஈழத்தமிழர் மீதான போரை முன்னெடுத்துச் செல்வதாக தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் காங்கிரஸ் அரசுக்கெதிராக போராட்டம் வெடித்துள்ளது.இந்நிலையில், கடந்த பிப்-26 ந் தேதி திண்டுக்கல்லில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணி தமிழினத்தின் மீது புரையோடிய சம்பவமான ராஜீவ் கொலை என்ற புண்ணைக் கீறிப் பார்த்திருக்கிறார். தமிழினத்திற்கு காங்கிரஸ் செய்த துரோகங்களையும்,பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு ஆற்றிய "அரும் பெரும் தொண்டுகளை" பட்டியலிட்டிருக்கிறார்.
இவ்வாறாக, காங்கிரஸ் பற்றியும், சோனியா பற்றியும் பேசியதற்காக, கொளத்தூர்.மணி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருக்கிறது. நல்வாய்ப்பாக இத்தாலிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்படாமல் இந்திய பாதுகாப்புச் சட்டத்தை ஏவி விட்ட தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தாராளமாக நன்றித் தெரிவிக்கலாம்.
கடந்த 2000 ஆம் ஆண்டில், கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டப் போது,கருநாடகத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வுரிமையே கேள்விக்குள்ளானது. வழக்கம் போலவே, கலைஞர் தனது ஆட்சிக்கான ஆபத்து வந்துவிட்டதாகவேப் பார்த்தார். கொளத்தூர். மணி அவர்களின் முயற்சியினாலேயே கன்னட நடிகர் மீட்கப்பட்டார். கலைஞரின் ஆட்சியும் தொடர்ந்தது.
வள்ளுவத்திற்கு குறளோவியம் தீட்டிய கலைஞர்,செய்ந்நன்றி மறப்பவரா, என்ன?வரும் மே-13 ந்தேதி பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது.கொளத்தூர். மணி வெளியிருந்தால் சும்மா இருக்கமாட்டார். காங்கிரசுக்கெதிராகப் பேசுவார்.காங்கிரசின் துரோகத்தை அம்பலப்படுத்துவார்.
கோடையில் தகிக்கும் வெயிலில், கொளத்தூர்.மணி, அவ்வளவு சிரமப்பட்டு பிரச்சாரம் செய்வதை கலைஞரின் நன்றி மறவா நன் நெஞ்சால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதனாலேயே, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாம், மதுரை மத்திய சிறையில் வைத்து அழகு பார்க்கிறார்.
பெரியாரின் சுண்டுவிரல் பிடித்து, பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த கலைஞரின் அரசு, பெரியார் தொண்டன். கொளத்தூர். மணியை அரசு விருந்தினராக்கி, தேர்தல் கூட்டுக்காக...இன உணர்வுக் கொள்கைக்கு வேட்டு வைத்துள்ளது.
கலைஞரைத் தவிர,பெரியாருக்கும், பெரியார் கொள்கைகளுக்கும் இதை விட யாராலும் சிறப்புச் செய்யமுடியாது.
கருப்புச்சட்டை :2 (சாயம் வெளுத்தது)
முதல்வர்.கருணாநிதி மீது மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் கூட அவரின் நினைவாற்றல் குறித்து வியப்பதுண்டு. இந்த நினைவாற்றலினால், சிக்கி சின்னாபின்னாமாகிக்கொண்டிருப்பவர் - தமிழர் தலைவர் தான்!
தான் நடத்தும் "விடுதலை" நாளிதழில் மட்டுமே தன்னை "தமிழர் தலைவர்" என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வீரமணியே அவர்!
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 30 ந் தேதி நள்ளிரவு - சென்னை சி.அய்.டி நகர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கலைஞர், மேம்பால ஊழல் வழக்கிற்காக,தமிழக காவல் துறையினரால், அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். அய்யோ, கொல்றங்கப்பா ! கொல்றங்கப்பா !! என்ற ஓலம் தமிழகத்தையே திகிலில் உறையச் செய்தது.
ஆனால், வீரமணி மட்டும் அ.தி.மு.க காரனையே மிஞ்சும் அளவிற்கு, கலைஞர் "சண்டித்தனம்" செய்கிறார் என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனை யார் மறந்தாலும் கலைஞர் மறக்கவில்லை. காலம் பார்த்து காத்திருந்தார்.
வீரமணியும் அணி மாறி கலைஞரிடமே வந்துச் சேர்ந்தார் என்பதை விட கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீரமணி காங்கிரசை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தே தீரவேண்டும்.இந்த கருப்புச் சட்டைக்காரர், கதர்சட்டைகளுக்கு வால் பிடித்துத் திரிய வேண்டும்.தமிழகமே, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கொதித்துக் கிடக்க வீரமணியோ "தேசியத் தலைவர்"களான சுதர்சனம்,தங்கபாலு, சின்னப்பண்ணையார் வாசன் மற்றும் காங்கிரசின் பல குழுத்தலைவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
வீரமணியின் சொந்தப்புத்திக்கும்,பெரியார் தந்த புத்திக்கும் ஈழப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்றுத் தெரியும்.ஆனால், அவரால் வாய் திறக்கமுடியாது.
பழைய ஞாபகத்தில்...காங்கிரஸ் தவிர்த்த திராவிட பார்முலா பற்றியெல்லாம் உளறிக் கொட்ட முடியாது.கலைஞருக்கு, அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தால், தனது இத்தனை கொள்கை சமரசத்திற்கு பிறகு பெற்ற"வேந்தர்" பதவிக்கு வேட்டுத் தான்! தன்னைப் பற்றி வனவாசம் என்ற நூலை எழுதிய நண்பன் கண்ணதாசன், திராவிட இயக்க எதிர்ப்பாளன் - பார்ப்பனசுந்தர ராமசாமி ஆகியோர் நூல்களையே நாட்டுடைமையாக்கிய கலைஞர் பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கிவிடுவார்.
அத்தோடு விட்டால் பரவாயில்லை. பெரியார் சொத்துக்களையும் நாட்டுடைமையாக்கிவிட்டால்......... நெஞ்சம் பதறுகிறது வீரமணிக்கு !
அதனால் தான், வக்கீல்கள் போராட்டத்தின்போது சோனியாகாந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படங்கள் எரிக்கப்பட்ட பிறகும், தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வக்கீல்கள் இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று வீரமணியார் கொக்கரிக்கிறார்.
தி.மு.க., காங்கிரஸ் வக்கீல்களே, இதற்குப்பிறகும் உங்கள் கடமை என்ன? இதுகண்டு ஆத்திரம் வரவேண்டாமா? வழக்கம் போல் கோஷ்டி பாடுவதுதானா? என்று கொம்பு சீவி விடுகிறார்.
சோனியா படத்தை எரித்தால் காங்கிரஸ்காரன் சும்மாயிருந்தாலும், டமிலர் தலைவரால் இருக்கமுடியவில்லை.
பெரியார் திராவிடர் கழகம், சத்யமூர்த்தி பவன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தால்,வீரமணி வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, கராத்தே.தியாகராஜனோடு கைகோர்த்து நின்று சத்யமூர்த்தி பவனை காவல் காப்பார் போலும்.
கல்வி நிறுவனங்களின் " வேந்தர்" பட்டம் மற்றும் பெரியார் சொத்துக்கள் ஒரு பக்கம் !
இன உணர்வு, இயக்க லட்சியம் மற்றும் சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழர் மறுபக்கம்!!
வீரமணி எந்த பக்கம் நிற்பார் என்று தெரிந்தே, வீரமணியின் சண்டித்தனமான வார்த்தைகளுக்கு பழி வாங்குகிறார் கலைஞர்.
நம் தொப்புள் கொடி உறவுகள் உண்ண உணவின்றி,காயத்திற்கு மருந்தின்றி பிஞ்சு குழந்தைகள் பாலுக்கு துடிக்கும் நேரத்தில், தங்கபாலுவோடு "கை" சின்னத்திற்கு ஓட்டு பொறுக்கும் அவமானத்தை விட "கை" விலங்கு சுமந்து சிறையில் கிடப்பதே கருப்பு சட்டைக்கு அழகு!
No comments:
Post a Comment