உலகம் முழுவதும் பரவி புலம்பெயர்ந்த தமிழர்கள் தம் தாய்மொழி தமிழை காக்க
அயலான் நாட்டிலும் அயராது உழைத்துவருகின்றனர். அப்படிப்பட்டவர்களில்
ஒருவர்தான் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த அய்யா பெ.கண்ணுச்சாமி பெரியவர்
அவர்கள்.
சிங்கப்பூரில் இத்திரிட் எனுமிடத்தில் 03.08.1914-ஆம் நாள்
திரு.பக்கிரிசாமி- மங்களம் அம்மையாருக்கு மகனாக ப.கண்ணுச்சாமி பெரியவர்
பிறந்தார். சிங்கப்பூரில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களைவிட
தொடர்வண்டி நிலையத்தில் கடைநிலை ஊழியவர்களாக அடிமைகளாக இருந்தவர்களின்
எண்ணிக்கை மிக அதிகம். அக்காலகட்டத்தில் மலாய் மொழி தெரிந்த நபர்களுக்கு
மட்டுமே சிங்கப்பூரில் மதிப்பு இருந்தது.
அக்காலகட்டத்தில் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கற்ற பெரியவர் கண்ணுச்சாமி
தமிழ்மீது தணியாத தாகம் கொண்டிருந்ததால் தமிழை தனிக்கல்வி சென்று
கற்றார்.
சிங்கப்பூரில் பொது அறிவிப்புகள் , பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும்
தமிழ் மொழி இருக்கவேண்டும் என்பதை நடைமுறையாக்கிட அரசு அலுவலகங்களுக்கு
மனு எழுதி செயல்படுத்தினார். "சூச்சியாவ் மார்க்கெட்டிங்"பெயரைத்
தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப்போராடி
வெற்றிபெற்றார். 1960 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் அரசாங்கக்குத்தகைகளின்
உடன்பாடு அறிவிப்புகள் தமிழில் எழுதப்படல் வேண்டும் என்று கோரி, தமிழ்
மட்டுமே தெரிந்த குத்தகைக்காரர்களுக்காகப் பாடுபட்டார். நலவாழ்வு,மைய
நலநிதிக்கழகம், போக்குவரத்துத்துறை, தொலைத்தொடர்பு வாரியம் போன்ற
அரசுப்பணி அமைப்புகளின் தொடர்புகள் அனைத்தும் தமிழ் வழிப்படுத்தப்பட
வேண்டும் என்பதற்காகப் போராடினார். இதனால் இவர் கோரிக்கை கண்ணுச்சாமி
என்ற அடை மொழி பெற்றார்.
இவர் சிங்கப்பூர் தமிழ்மன்றத்தின் தொடக்ககால உறுப்பினராவார். "கேட்க
நமக்கு உரிமை இருக்கிறது; உரிமைகளைப் பெறுவது நமது கடமை; இதை நாம்
முறையாகக் கேட்கும் போது அரசும் முறையாகச் செயல்படும்" என்பது இவரது
கொள்கை. சிங்கப்பூரில் அரசு தொடர்பான அனைத்து அறிக்கைகள் , அறிவிப்புகள்,
இயக்கங்கள் கையேடுகள், சட்டங்கள் எல்லாவற்றிலும் தமிழ் இடம் பெற வேண்டும்
என்று உறுதியோடு உழைத்தவர் பெரியவர் ப.கண்ணுச்சாமி. இவர் தனது 85-ஆம்
அகவையில் 21.09.1999 அன்று காலமானார்.
1 comment:
சிங்கப்பூரில் தமிழர் வாழ்வுக்கும் தமிழர் நலனுக்கும் தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் பற்றிய செய்திக்கு நன்றி
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Post a Comment