இந்து கடவுள்கள், அவற்றின் புராணக்கதைகள் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கற்பனைகள்?
20 ஆம் நூற்றாண்டில் அவைகளை நடப்பு மூலம் செய்து காட்டுவது என்பது மேலும் எவ்வளவு காட்டுமிராண்டித்தனம் என்று கேட்கிறேன். ஒரு மனிதன் (அசுரன்) பூமியைப் பாயாகச் சுருட்டித் தூக்கி எடுத்துக் கொண்டு போய் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான் என்றால், எழுதினவன் எவ்வளவு மடையன் என்றால், அதை நம்புகிறவன் எவ்வளவு மடையனும், காட்டுமிராண்டித் தன்மை கொண்ட அயோக்கியனுமாய் இருக்க வேண்டும்?
பகுத்தறிவுப் பிரச்சாரத்தைப் பற்றி பார்ப்பனர்கள் நெருப்பில் நிற்பவர்களைப் போல துடிக்கிறார்கள், பதறுகிறார்கள். கடவுளை, மதத்தை நிந்தனை செய்கிறார்கள் என்றால் இந்தக் கடவுள்களையும், இந்தக் கதைகளைக் கொண்ட மதத்தையும் நிந்தனை செய்வது தப்பிதமா? நிந்தனை செய்து அழித்து ஒழிக்காமல் இருப்பது தப்பிதமா?
அப்பனும் மகளும் கணவன் மனைவியான கடவுள் கதை
தாய் என்றும் மகள் என்றும் பேதத்தை உணர்ந்த மனிதர்களைக் கேட்கிறேன். பத்து நாட்களுக்கு முன் அப்பனும் மகளும் கணவன் மனைவியாக வாழும் கடவுள்களின் கதையை, பண்டிகையாகக் கொண்டாடினார்கள். அதே முட்டாள்கள் பூமியைப் பாயாகச் சுருட்டிய கதையையும், அதே கதையை பூமிதேவி என்னும் கடவுளை பன்றி என்ற கடவுளை பன்றி உருவத்தில் கலவி செய்து ஒரு பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையையே விஷ்ணு என்னும் கடவுளும் அதன் பெண்டாட்டியும் (அப்பிள்ளையின் தாயாரும்) சேர்ந்து கொன்றார்கள். அப்படி கொன்ற நாளை மகிழ்ச்சி நாளாக பண்டிகை கொண்டாடப்போகிறோம் என்றால் இந்தக் கொண்டாட்டக்காரர்கள் மனிதர்களா? மனிதப் பிறவிகளா என்று கேட்கிறேன்?
கடவுளின் பெயரால் நம் பெண்கள் தாசி ஆவதா?
கடவுள், மதம், கடவுள் கதைகள் (புராணங்கள்) என்னும் பெயரால் மனிதன் எக்காத்திற்கும் மடையனாய், முட்டாளாய், அயோக்கியனாய் காட்டுமிராண்டியாகவே இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனிதன் தன்னை ஏன் மனிதன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்? மனிதன் பகுத்தறிவுவாதி என்றாலும் அந்தப் பகுத்தறிவின் மூலமே நாளுக்கு நாள், சகலதுறைகளிலும் மாற்றம் அடைந்து, வளர்ச்சி அடைந்து கொண்டு வரும்போது காட்டுமிராண்டி காலத்து அயோக்கிய கற்பனைகளைப் பற்றி கூட சிந்திப்பது அக்கிரமம் என்றால் இப்படிச் சொல்லும் கூட்டத்தினிடம் ஆட்சி இருக்குமானால் நம் கதி என்ன ஆவது?
இந்தக் கடவுளையும், மதத்தையும், மதக்கதைகளையும் சாக்காகக் காட்டி தமிழ் மக்களை இனியும் எத்தனை நாளைக்கு மடையர்களாக மானங்கெட்ட இழிமக்களாக ஆக்கி அதன் மூலம் வயிறு பிழைக்கலாம் உயர்வாழ்வு வாழலாம் என்றும் அயோக்கியர்கள் கருதி இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை!
இந்த நரகாசுரனைக் கொன்ற நாள் எனும் பெயரால் தீபாவளி எனும் பண்டிகை வரப்போகிறது. இதற்கு அரசாங்கத்தார் விடுமுறை விடுவது என்பது நீண்டநாளாய் நடந்து வருகிறது. இந்தப் பண்டிகையால் மக்களுக்கு எவ்வளவு மானக்கேடு, இழிவு, மெனக்கேடு, பணச்செலவு முதலியவை இருந்தாலும் மக்களின் அறிவு எவ்வளவு தூரம் பாழாக்கப்பட்டு, மக்கள் மடையர்கள் ஆகிறார்கள் என்பதும் பின் சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் எவ்வளவு தூரம் அறிவு கெட்டு மூடநம்பிக்கைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும் பற்றி சிந்தித்தால் மனம் பதறுகிறது.
இது மாத்திரமா? இச்செய்கையை நம்மால் நிறுத்த முடிய வில்லை. என்றால் நாம் எவ்வளவு தூரம் சமுதாயத்திலும் அரசியலிலும் அடிமைகளாக இருக்கிறோம் என்பது புலனாகிறது. தீபாவளி கண்டன நாள் பொதுக்கூட்டம் நடத்துங்கள்! பி.ஏ., எம்.ஏ., பொது அறிவில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் இந்த மடைமையான காட்டுமிராண்டிச் செயலுக்கு அடிமைகளாக இருக்கின்றார்கள் என்றால் இன்றையக் கல்வி எவ்வளவு தூரம் அறிவை, மானத்தை உண்டாக்க முடியாத, அறிவுக்குப் பயனற்ற கல்வியாக இருக்கிறது என்பதைக் கருதி வேதனைப் படுகிறோம். அரசாங்கமும் இன்றைய கல்விக்கு “தகுதி, திறமை” இல்லை என்றுதான் கவலைப்படுகிறதே தவிர, கல்வியினால் அறிவு ஏற்படவில்லையே என்று எந்த அரசாங்கமுமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனவே இதன் மூலம் நமது இயக்கத் தோழர்களை, கூடுமானால் பகுத்தறிவு இயக்கத் தோழர்களை ஒன்று வேண்டிக் கொள்கிறேன். என்னவென்றால் தமிழ்நாட்டில் ஆங்காங்கு உள்ள கழக, பகுத்தறிவு இயக்கத் தோழர்கள் வசதியுள்ளவர்கள் ஒவ்வொரு ஊரிலும் தீபாவளி கண்டன நாள் என்று ஒரு நாள் ஏற்படுத்திக்கொண்டு அன்று பொதுக்கூட்டம் கூட்டியும் வீடு வீடாகச் சென்றும் தீபாவளிப் பண்டிகை என்னும் முட்டாள்தனத்தை, காட்டுமிராண்டித்தனத்தை விளக்கிச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.
-தந்தை பெரியார்
No comments:
Post a Comment