Tuesday, October 7, 2008

சரஸ்வதி பூஜை அறிவுக்கு சிறிதும் ஒவ்வாததே - தந்தை பெரியார்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமிக்கு பூசை செய்வதன் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே பார்ப்பனர் மட்டும் படித்து பெரிய படிப்பாளிகளாக ஆகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியாத மக்குகள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


முதலாவது சரஸ்வதியென்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும்.அதாவது சரஸ்வதி என்கிற பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு இந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவர் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி உடன்படாமல் பெண்மான் உருவெடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஓர் ஆண்மான் உருவெடுத்து தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவெடுத்து மானைக் கொல்லவும் பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பித்த செயலும், பிரம்மனுக்கு மனைவியாகச் சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது. அதாவது தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது!


சரஸ்வதியின் உற்பவத்தைக் குறித்த மற்றொரு கதையின் படி, சரஸ்வதி பிரம்மாவுக்கு பேத்தி ஆகிறாள். அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்ட போது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி - மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் பார்ப்பனர் புராணப்படியே மிக்க ஆபாசமும், ஒழுக்க ஈனமும் ஆனதாகும்.நிற்க,


இந்த யோக்கியதையுடைய அம்மாளை மக்கள் எதற்காக பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமென்றும், வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு சரஸ்வதி பூஜையென்றும், ஆயுதபூஜையென்றும் ஒரு நாளை குறித்து வைத்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் அடுக்கி வைத்துப் பூஜை செய்கிறார்கள்.

இந்தப் பூஜையில் அரசன் தனது போர் ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் தராசு, படிக்கல், மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளர்கள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரசாலைக்காரர்கள் இயந்திரங்களையும் மாணவர்கள் பாடபுத்தகங்களையும் குழந்தைகள் பொம்மைகளையும் தாசிகள் தங்கக் சேலை ரவிக்கைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளையும் உழவர்கள் மண்வெட்டி, ஏர் முதலிய உழவுக் கருவிகளையும் மற்றும் இது போன்ற ஒவ்வொருவரும் அவரவர் பிழைப்புக்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களையும் வைத்துப் பூஜை செய்கிறார்கள்.இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று, அதனால் வரக்கூடிய வரும்படிகளும் போய், பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பாகத்தைச் செலவு செய்து போதாவிடில் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட, இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கே இடமில்லாமல் இருக்கிறது.


ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்துப் பூஜை செய்தே அறியாத வெள்ளையன் துப்பாக்கி முனைக்கு மண்டியிடவில்லையா?சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ; தப்பு நிறை நிறுத்தாமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?அது போலவே கைத்தொழில் செய்பவர்களும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நேர்மையாய் நடந்து கொள்கிறார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாகத் தொழில் கிடைக்கின்றது என்றாலும் சொல்வதற்கு இல்லாமல்தானே இருக்கிறார்கள்!அது போலவே புத்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதப் குப்பைகளையும் வைத்து சந்தப் பொட்டு இட்டு, பூஜை செய்கிறார்களே அல்லாமல் காலோ கையோ பட்டு விட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகிறார்களே அல்லாமல் நமது நாட்டுப் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகத்தானே இருந்து வருகின்றார்கள்.


இவ்வளவு ஆயுதபூஜை செய்தும் சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள்! நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குப் போகிறார்களே இதன் காரணமென்ன?நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்துக்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவைகளாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தானே இருக்க வேண்டும்.என்னைப் பொறுத்த வகையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது கருத்து.


வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கிற பேச்சோ கல்வி தெய்வம் என்ற எண்ணமோ அறவே இல்லை. அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதி தெய்வமாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிட்டு வருகிறோம்! இருந்தாலும் நமக்குக் கல்வியில்லை!ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதை கழிக்கப் போனால் அந்த ஏட்டை (சரஸ்வதியை)க் கொண்டே மலம் துடைத்துங் கூட அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண் பெண்கள் படித்திருக்கிறார்கள். உண்மையில் சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால், பூஜை செய்பவர்களைத் தற்குறிக ளாகவும், மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்பதையே சிந்தித்துப் பாருங்கள்.


யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வத்தின் அம்சமாயிருக்குமானால் அதைப் பூஜை செய்யும் நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்குமா?சரஸ்வதியைக் கனவிலும் கருதாமல் சரஸ்வதி பூஜை செய்கிறவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.


இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக மக்கள் பணம் செலவு செய்வது; நேரச் செலவாவது; அறிவைப் பறி கொடுப்பது. பல லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம் குங்குமம் கற்பூரம் சாம்பிராணி கடலை பொரி சுண்டல் வடை மேளவாத்தியம் வாழைக் கம்பம் பார்ப்பானுக்கு தட்சணை சமாராதணை ஊர்விட்டு போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். நாட்டின் செல்வமல்லவா? ஒரு வருடத்தில் இந்த ஒரு பூஜையில் இந்நாட் டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானமாகும் என்று கணக்குப் பார்த்தாலே மற்ற பண்டிகைகள், உற்சவங்கள், புண்ணிய தினங்கள், அர்த்தமற்ற சடங்குகள் இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? நாட்கள் என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை எவ்வளவு அதிகம் என்பது சுலபத்தில் விளங்கிவிடுமே! இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணரும் கணக்குப் பார்த்ததே இல்லையே!


(விடுதலை - 12-10-1969)

No comments: